மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை தேவை!

தமிழ் நாடு உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி தீவிரமடைந்துள்ளது. தொடங்கிய முதல் நாளிலிருந்தே சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்த நேரத்தில் பெருமழை கொட்டித் தீர்க்கும் நிகழ்வுகள் பதிவாகி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 24 மணி நேரத்தில் 10 செ.மீ.க்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. குறிப்பாக 24.10.2026 காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பர்லியாரில் 25 செ.மீ., கீழ் கோத்தகிரியில் 20 செ.மீ., குன்னூரில் 17 செ.மீ. என பெருமழை பதிவாகியது.

நீலகிரி மாவட்டம் முழுக்க நேற்று இரவு பெய்த பெருமழை காணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் மண்சரிவு ஏற்ப்பட்டு அரசுப்பேருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். கோடைக்கானலிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலைகளும் வீடுகளும் சேதமடைந்தன. இரண்டு மாவட்ட நிர்வாகங்களும் சுற்றுலாப் பயணிகள் இன்னும் சில நாட்களுக்கு மலைப்பகுதிகளுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரியில் சுற்றுலாத் தளங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அடுத்த 3 நாட்களுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைக்கான வாகனங்களைத் தவிர பிற வாகனங்களின் (அரசுப் பேருந்துகள் உட்பட) போக்குவரத்தை மாலை 6 மணி முதல் காலை 7மணி வரை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளை ஒவ்வொரு பருவமழைக் காலத்தின் போது தமிழ் நாடு சந்தித்து வருகிறது. குறுகிய காலத்தில் பெருமழைப்பொழிவு என்பது ஏற்கெனவே இயல்பாகிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சூழலில்தான் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வலிமையான ஒரு எல் நினோவையும் நாம் சந்தித்து வருகிறோம். அப்படியிருக்க வழக்கமான பருவமழை கால மழைப்பொழிவை எதிர்கொள்ள மட்டுமே தமிழ் நாடு தயாராகியிருப்பது நிச்சயமாகப் போதாது. மக்களுக்கு உடனுக்குடன் பருவமழை உள்ளிட்ட இடர் எச்சரிக்கைகளை வழங்க வேண்டிய பேரிடர் மேலாண்மைத் துறையின் X சமூக வலைதளக் கணக்கு டிசம்பர் 2025க்குப் பிறகு முடங்கிக் கிடக்கிறது.

சுற்றுலாப் பயணிகள் மலை மாவட்டங்களுக்கு வரவேண்டாம் என்பதைக் கூற இவ்வளவு பெரிய பாதிப்புகளும் உயிரிழப்பும் ஏற்படும் வரை அரசு ஏன் காத்திருக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது.  கட்டற்ற வளர்ச்சித் திட்டங்களால் மேற்குத் தொடர்ச்சியின் நிலப்பயன்பாடு பெருமளவில் பாதகமான மாற்றங்களை அடைந்துள்ளது. பசுமைப் பரப்புகளை இழந்ததால் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகள் மழையைப் பிடித்து வைத்துக்கொள்ளும் திறனை இழந்துள்ளன. குறைந்த நேரத்தில் பெருமழை பெய்யும்போது நிலைமை இன்னும் மோசமடைந்து நிலச்சரிவு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் கேரளாவில் பெரியளவிலான நிலச்சரிவு நிகழும்போது அவற்றிலிருந்து தமிழ் நாடு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவலியுறுத்தி வந்துள்ளோம். இப்போது தமிழ் நாட்டிலேயே அவை நடைபெறுகின்றன. பெரும் அழிவின் முன்னோட்டமாகவே இவ்விபத்துகளை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைகள் வெறும் சுற்றுலாக்கானவை மட்டுமல்ல. அவைதான் தமிழ் நாட்டின் முதன்மை நீராதாரம். எண்ணற்ற உயிரினங்களுக்கு வாழிடம். அவற்றைப் பாதுகாக்க அரசு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம். இப்படி ஒரு நெருக்கடியான சூழலில்தான் கடந்த 17.10.2026 அன்று பல்லடத்தில் நடைபெற்ற மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டமும் அதில் இயற்றப்பட்ட தீர்மானங்களும் முக்கியத்துவம் பெறுகிறது. ஓசை அமைப்பு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் வனம் இந்தியா பவுண்டேசனுடம் இனைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வில் தமிழ் நாடு முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் கலந்து கொண்டன.

அக்கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1. மேற்குத் தொடர்ச்சி மலை முழுமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய மாதவ் காட்கில் குழுவின்  பரிந்துரைகளை ஒன்றிய , மாநில அரசுகள் மீண்டும் பரிசீலனை செய்து  அதனை செயல்படுத்த  வேண்டும் . அதன் முன்னெடுப்பாக 59,940 சதுர.கி.மீ பரப்புள்ள பகுதிகளை (மொத்த மலைப்பரப்பில் 36.49%) சூழலியல் உணர்திறப் பரப்பாக ( Ecological Sensitive Areas ) அறிவிக்க வேண்டும் என்ற கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரைகளை ஆறு மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

Leave a Comment